திராவிடமும், தமிழ்த்தேசியமும் பெரும்பாலோரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில்- இரண்டிலும் கொண்டாட வேண்டியிருக்கிற கொள்கைப்பாடு குறித்தும், இரண்டு அமைப்புகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய மேம்பாடு மற்றும் திருத்தம் குறித்தும் பேசுகிறது இந்தக் கட்டுரை. 26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழை, திராவிட மொழி என்று ஆரியர்கள் சுட்டினர். இது இங்லீஸை ஆங்கிலம் என்று தமிழ் சுட்டி வருதற்கு இணையானது ஆகும். இங்லீஸ் என்பதை ஆங்கிலம் என்று எந்த ஒரு ஆங்கிலேயரும் எழுதமாட்டார். அதுபோல தமிழ் என்பதை எந்த ஒரு தமிழனும் திராவிட என்று எழுதுவது பிழையாகும். ஆனால் திராவிட என்பது தமிழ் கூட அல்ல. தமிழுக்கு முதன்மையானது என்கிற வகையாக முன்னெடுத்து வருகின்றன திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் முதலாகவே, உலகில் எந்த தமிழனும் இது வரலாற்றுப்பிழை என்று திராவிட என்கிற முன்னெடுப்பைக் கண்டித்தே வந்திருக்கின்றனர். அடுத்து தமிழ்த்தேசியம் என்கிற தலைப்பிற்கு வருவோம். நாவலந்தேயம் என்பது தமிழ்மொழிக்கு மட்டுமே உரிய தேயம். நாவலந்தேயம் என்பதற்கு 'நடுவாக அமைந்த இமயத்திற்கு வலமாக அமைந்த தேயம்' என்பது பொருள். இமயத்திற்கு இடமாக ஒருபேரினம் இடம்பெயர்ந்ததை தமிழ்முன்னோர் நன்கு அறிவர். வலம்பெயர்தலை வலசை என்று தமிழ்முன்னோர் தெரிவித்ததும் அதன் பொருட்டே. கருத்தியல் அடிப்படையில்- இடதுசாரி மற்றும் வலதுசாரி என்கிற தலைப்பில் ஒட்டுமொத்த உலகினரையும் வகைபடுத்தி வருகின்றது இன்றைய அரசியல். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தம் மண்ணை நடுவுக்கு வலமாக அமைந்த தேயம் என்ற கொண்டாடியிருந்தனர் தமிழ்முன்னோர். தேயத்திற்கு தமிழ்பேசும் மக்களுக்கான மண் என்றே பொருள். தேயம் என்பதை பொதுவான மண்ணாகக் கருதி அதை தேஷ் என்று மொழி பெயர்த்துக் கொண்டது சமஸ்கிருதம். அப்படி வந்தவைகள்தாம் மத்தியப் பிரதேஷ் உத்தரப்பிரதேஷ் என்பவைகள். அந்தத் தேஷைத்தான் தேசியம் என்று தமிழ்ப்படுத்தி தமிழ்த்தேசியம் என்று புழங்கிக் கொண்டிருக்கின்றனர் சிலபல தமிழ்மண் ஆர்வலர்கள். இன்றைக்கு திராவிடம் என்கிற தலைப்பு பேரளவாக கேள்விக்கு உள்ளாக்கப்படுவது போல இடுகுறிச் சொல்லும் மொழிபெயர்ப்பும் ஆன தேசியம் என்கிற தலைப்பும் நாளைக்கு பேரளவாக கேள்விக்குள்ளாக்கப்பட்டே தீரும். இன்றைக்கே அவர்கள், தங்கள் தமிழ்த்தேசியம் என்கிற தலைப்பை, 'தமிழ்த்தேயக் கோட்பாடு' அல்லது 'தமிழ்த் தேயத்தியம்' அல்லது 'தேயத் தமிழியம்' மாற்றிக் கொள்வது சிறப்பாகும். இந்தியாவிலேயே- ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகளுக்கு, பன்முகக் கலாச்சாரத்திற்கு, ஆதரவு அரசியலை முன்னெடுக்கிற கொள்கைப்பாட்டைக் கொண்டிருப்பவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. திராவிட இயக்கத்தில் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகளை அறிந்த மற்றும் மொழிகளுக்கிடையலான பாகுபாட்டை முன்னெடுக்காத அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஒன்றியத்தை நேற்று ஆண்ட காங்கிரசரோ, இன்று ஆள்கிற பாஜகவினரோ கொண்டாடுவது ஹிந்தி என்கிற ஒன்றை மொழியை மட்டுமே. ஹிந்தி என்கிற ஒற்றை மொழி வளர்ச்சிக்கு மட்டுமே ஒன்றிய அரசில் திரளும் அனைத்து மாநிலங்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக. தேசியக் கட்சிகள் என்று பீற்றிக்கொண்டு கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஹிந்தி என்கிற ஒற்றை மொழிக்கு ஆதரவாக மட்டும் அல்லாமல், அந்த மொழியை மற்ற இருபத்தியோரு மொழிகள் மீதும் திணித்தே வந்திருக்கின்றன காங்கிரசும் பாஜகவும். ஆனால் ஒன்றியத்தை ஆளும் பெருந்தகுதி பெற்ற உண்மையான தேசிய கட்சிகளான திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியில் மட்டும் ஆட்சிக்கு முனைந்து கொண்டிருக்கின்றன. அட்டவணை எட்டில் குறிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட இருபத்தியிரண்டு மொழிகளுக்கான ஆட்சி அதிகாரத்தை திராவிட இயக்கங்களாலோ தமிழ்த்தேயத்தியல் பேசிக்கொண்டிருக்கிற எந்த ஒரு தமிழனின் ஆட்சியில் மட்டுமே சாத்தியப் படுத்த முடியும். திராவிட இயக்கங்கள் மீது தமிழ்த்தேயத்தியல் பேசுவோர் வைக்கிற குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் மற்ற தென்மொழியனருக்கும் ஆட்சி உரிமை வழங்கப்படுகிறது என்பதேயாகும். அப்படியான நிலையில் திராவிட இயக்கங்களுக்கு மற்ற மற்ற தென்மாநிலத்தினர் ஆட்சி உரிமை தந்தால் இன்னும் சிறப்பாக மற்ற தென்மாநில மொழியினருக்கு திராவிட இயக்கங்கள் பணியாற்றும் என்பது உண்மைதானே. இந்திய மொழிகள் அனைத்தும் தமிழ்மொழியின் வேரும் சமஸ்கிருதத்தின் கிளையும் கொண்ட மொழிகளே ஆகும். சமஸ்கிருதத்தைக் கிளையாகவும் உருது மற்றும் அரபிமொழியை வேராகவும் கொண்ட இந்தியாவின் ஒற்றை மொழி ஹிந்தி ஆகும். அந்த வகையான ஹிந்திமொழியின் மூலமாக இந்திய மொழிகளின் தமிழ்வேரை அறுத்துவிட்டு உருது அராபி மொழிவேரைப் பொறுத்தும் அறுவைச் சிகிச்சையை முன்னெடுத்து வருகின்றன காங்கிரசும் பாஜகவும். காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து இந்திய ஒன்றியத்தை மீட்க, அட்டவணை எட்டின் இருபத்தி இரண்டில் ஒரு மொழியாக மட்டும் என்று ஹிந்தியை மடைமாற்றம் செய்ய, அட்டவணை எட்டின் தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்கி அனைத்து மாநிலங்களிலும் இருமொழி மட்டும் கற்றலை நிறுவ- திராவிட இயக்கங்கள் தங்கள் இயக்கங்களை நாவலந்தேய அல்லது அனைத்திந்திய இயக்கங்களாக மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி, தங்கள் இலக்கு- ஒட்டு மொத்த இந்தியாவே என்கிற உண்மை நோக்கத்திற்கு இயங்கலாம். தமிழ்த்தேசியம் என்கிற தலைப்பில் இயங்கும் அமைப்புகள் தங்கள் தலைப்பை சிறப்பாகத் திருத்தி தமிழ்மண்ணில் தமிழர் ஆட்சி என்கிற நோக்கத்திற்கு வெளிப்படையாக இயங்கலாம். ஒன்றியத்தில், ஒட்டு மொத்த இந்தியாவே இலக்கு என்கிற நோக்கத்திற்கு இயங்கும் திராவிட இயக்கங்களால் மட்டுமே மாநில நோக்கங்களுக்கும் சிறப்பான மரியாதை தரமுடியும். தமிழ்தேயத்தியல் கட்சிகள் மாதிரி அந்தந்த தேயத்தியல் கட்சிகள் அந்தந்த மாநிலங்களை ஆளட்டும், ஒட்டுமொத்த இந்தியா இலக்கிற்கான திராவிட இயக்கங்கள் நாவலந்தேய இயக்கங்களாக தங்கள் தலைப்பை மேம்படுத்திக் கொண்டு இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கிடையிலான அனைத்து மக்களுக்கிடையிலான ஒப்பரவை நிலைநாட்டட்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,578.