Show all

நெஞ்சம் மறக்காத நூல்! ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்

ஒரே மூச்சில் படித்து முடித்த வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நூல்தான் ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல். 

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பு படிப்பை முடித்து விட்டு. மேற்கொண்டு கல்வியைத் தொடர போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், மேட்டூர் அலுமனியத் தொழிற்சாலையில் பொறிப்பகுதி பொருத்துநர், கடைசல் பிடிப்பவர், பற்றவைப்பவர் ஆகியோருக்கு உதவியாளராக ஒப்பந்த பணியில் அன்றாடம் இரண்டு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன்.

வீட்டிலிருந்தே மதுரை தமிழ்ச்சங்கத்தில் விண்ணப்பித்து  தமிழ்ப் புலவர் படிப்பை படித்துக் கொண்டிருந்தேன். தற்போது இருப்பது போல பல்கலைக் கழகங்கள் பயிற்றுவிக்கும் அஞ்சல் வழிப் படிப்புகள் குறித்து எல்லாம், எனக்கு எந்த அறிமுகமும் அப்போது இருக்க வில்லை. தமிழை விரும்பிப்; படிக்கும்- அந்த வகைக்கு, தமிழ் மீது எனக்கான ஆர்வத்தைத் தூண்டியவர் மேட்டூர் வைதீசுவரர் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் தாமேதரன் ஐயா அவர்கள். அப்போது கருமலைக்கூடல் பகுதியில் அமைந்திருந்த அரசு நூலகத்தில் உறுப்பினராக இணைந்து, பல நண்பர்களையும் இணைய வைத்து, புத்தகங்கள் எடுத்து வந்து படித்து அடிக்கடி கலந்துரையாடுவோம்.

அப்படி எடுத்து வந்து ஒரே மூச்சில் படித்து முடித்த வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நூல்தான் ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல் ஆகும்.

அந்த நூலை சொந்தமாக வாங்க வேண்டும் என்று முயற்சித்த போது அந்த நூல் எனக்கு கிடைக்கவேயில்லை. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போகும் போதெல்லாம் என் கண்கள் அந்தப் புத்தகத்தைத் தேடும். ஆனால் கிடைக்காத நிலையே தொடர்ந்தது. 

இன்றைய தேடலில்தான் அந்த நூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பதிப்பிக்க பட்டு, மெரினா புத்தக்கடையில் கிடைக்கிறது என்றும், அதற்கான தொடர்பு செல்பேசி எண்: 88834 88866 என்றும், நூல் குறித்த தகவல் எல்லாம் கிடைக்கப் பெற்று அந்த நூல் குறித்து இந்தக் கட்டுரையை எழுத முனைந்தேன்.

நூலின் பெயர்: தென் அமெரிக்காவின் சோழர்கள்

ஆசிரியர்: மீ. மனோகரன்

வகை: வரலாற்றாராய்ச்சி நூல்

துறை: இன்கா மன்னர்களும் சோழர்களும் ஒரே இனத்தவரே

இடம்: மதுரை

மொழி: தமிழ்

பக்கங்கள்: 16 ூ 218

பதிப்பகர்: திருவடிப் பதிப்பகம்

பதிப்பு: 1976ல் முதற்பதிப்பு

ஆக்க அனுமதி: ஆசிரியருடையது

தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று அடிப்படையாக நிறுவ முற்படுகிறது. அந்த அத்தியாயங்களும் உட்தலைப்புகளும்,

கண்டுபிடித்தவரைக் கண்டுபிடித்தல்

புது உலகு காணப் புறப்பட்டோர்

வைக்கிங்குகளின் வழிவந்தோர்

அயரா அயர்லாந்தியர்

வேல்சு இளவ்ரசன்

காட்டலோனியக் கடலோடிகள்

பண்டை ரோமானியர்

புகழ்மிக்க பொனீசியர்

துணிவுமிக்க துருக்கியர்

அலைகடல் கடந்த எழுஞாயிறு நாட்டவர்

சீனர் சென்ற விதம்

இந்தோ-ஆரியரின் பங்கு

தவறுகளின் தந்தை

செவ்விந்தியரும் தென்னிந்தியரும்

கொண்டவையும் கொடுத்தவையும்

சமயம் தோற்றுவித்த சமுதாய நிலைகள்

மூடநம்பிக்கை சாய்த்த முடி

பள்ளிப் படைக் கோயில்கள்

கோயில்களும் குடிமக்களும்

தீவிரச் சமய ஈடுபாடு இழைத்த தீமை

செங்கதிர்ச் செல்வர்கள்

இயற்கையை வணங்கிய இயல்பினர்

கோயில் பல எடுத்த குல வேந்தர்

குலதெய்வத்தின் கோயிலுக்கு பொற்கொடை

தோற்றவர் கடவுளரை எற்றக் கொற்றவர்

ஆலயங்களும் ஆரணங்களும்

பேரரசர் தம் தனி வாழ்வில்

அரசியல் காரணமாய் அமைந்த மண உறவுகள்

உடன்கட்டை ஏறிய பெருங்கோப் பெண்டுகள்

இருநாட்டுக் கோடைத் திருவிழாக்கள்

பேரரசன் பிறந்த நாளோ! தெய்வத் திருநாளோ!

விழாக் காண உதவிய விண்ணியல்

திறன்மிகு ஆட்சிமுறை

நிருவாகப் பிரிவினை

தெரிப்பும் வரிவிதிப்பும்

அரசகுடும்பமும் ஆளுநர் நியமனமும்

அரியனை ஏறுமுன் அனுபவம்

பெருவழி கண்ட இருபெருவேந்தர்

அஞ்சல்துறை அமைப்பு

துணைத் தலைநகரம் தோற்றுவித்தோர்

ஏரிகளால் ஏற்றம்

சொல்லாராய்ச்சி சிந்திடும் சுடரொளி

ஒற்றுமையுடைய சொற்கள் சில

அய்யர் பற்றிய ஆய்வு

அமைச்சர் ஆரியச் சொல்லா?

பெருவின் பெயர்க் காரணம்

பெருஞ்சோழ மரபும் பெருவும்

பெரிதே புரிந்த பேரரசர்கள்

உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள்

பெரு சேர்ந்த சோழர் காலப் பெயர்கள்

பெருவும் பெரும்பெயர் ஊர்களும்

பண்பாட்டுப் பயணம்

பூம்புகார் தொடங்கி தூம்பேஸ் துறைமுகம் தொட்டு

கடாரம் கொண்டோர்

இந்தோனேசியா எங்கணும்

பிலிப்பைன்சுடன் பிணைப்புகள்

ஆஸ்திரேலியப் பழங்குடிகலும் திராவிடர்களும்

மயோரிகளின் மண்ணில்

மலரும் மாலையும் மருவிடும் தீவினில்

ஈஸ்டர் தீவின் இணையற்ற சிலைகள்

விசித்திரத் தீவின் சித்திர எழுத்துகள்

கலபாகோஸ் கரையில்

ஒப்பியல் ஆய்வு உணர்த்திடும் உண்மைகள்

பூர்வதேசம் எனும் புதிர்

இலெமூரியா நூலாசிரியரின் மதிப்பீடு

சோவியத் அறிஞர் கொள்கை

சோழன் என்னும் பெயருக்குச் சொந்தக்காரர்கள்

வீழ்ச்சியும் விளக்கமும்

என்பனவாகும். ஆர்வமுள்ளவர்கள் நான் தெரிவித்த தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு இந்தச் சிறப்பான நூலை வாங்கிப் படித்து நீங்களும் கொண்டாடி மகிழ எனது நெஞ்சம் நிறைந்த  வாழ்த்துக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.