Show all

சி.பா.ஆதித்தனாரின் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' தமிழ் வாழ்த்து! நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில்

நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், சி.பா.ஆதித்தனாரின் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' தமிழ் வாழ்த்தின் பின்னணி குறித்து காண்போம்

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆங்கில ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து எட்டில், இந்திய விடுதலைக்கு முன்பே, பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட இந்திய நாட்டவர் நிருவாகத்தில் காங்கிரசாரின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக முதல் ஹிந்தி எதிர்ப்புப் போர் தொடங்கியது. 

இந்தப் போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முழக்கம் 'சுதந்திரத் தமிழ்நாடு' முழக்கமாக ஒலித்தது. அதற்குக் காரணமானவர் 'தமிழர் தந்தை' எனக் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

சி.பா. ஆதித்தனார் திருநெல்வேலி மாவட்டம் காயாமொழி என்ற ஊரில் 27.9.1905ல் சிவந்தி ஆதித்தர்- கனகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆதித்தனாருக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் பெயர் தையல்பாசு ஆதித்தனார். இளையவர் பெயர் தனஞ்செய ஆதித்தனார். மற்ற இரு தங்கைகள் பெயர் வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார்.

சி.பா.ஆதித்தனாருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். இவர் நான்கு அகவை எய்திய போது திருவைகுண்டம் காரனேசன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார்.

பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட இந்திய நாட்டவர் நிருவாகத்தில் காங்கிரசாரின் ஆட்சியின் கல்வியில், ஆறாம் வகுப்பில் வடமொழி அல்லது தமிழ்மொழி விருப்பப் பாடமாக கற்றுத் தரப்பட்டது. இவர் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக தெரிவு செய்து கல்வியைத் தொடர்ந்தார்.

பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து பரியியல் (பிசிக்ஸ்) பாடத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னை சென்று சட்டம் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1928இல் இலண்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு பாரிஸ்டர் பட்டப் படிப்பை தொடர்ந்து கொண்டே பல்வேறு நாடுகளில் இருந்து வரும் புகழ் பெற்ற ஆங்கில இதழ்களுக்கு கடிதம் எழுதி வந்தார். இதழ்களால் வெளியிடப்படும் இந்தப்பகுதிக்கு இலண்டன் கடிதம் என்று பெயர். அவர் பிற்காலத்தில் இதழியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு இது உரமாக அமைந்தது என்று கூறலாம்.

1933இல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆதித்தனார் அங்கிருந்தவாறே சிங்கப்பூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு புகழ்பெற்று விளங்கினார். சிங்கப்பூரில் செல்வாக்கு பெற்ற ஓ.இராமசாமி என்பவரின் மகள் கோவிந்தம்மாள் என்பவரை 9.1.1933இல் திருமணம் செய்து கொண்டார். ஆதித்தனாருக்கு இராமச்சந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும், சரசுவதி என்ற ஒரு மகளும் உண்டு.

தமிழ்நாட்டில் 1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வந்த போது, சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்தப் போராட்டம் மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் 'தமிழ வேள்' கோ.சாரங்கபாணி அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதன்முறையாக 'தனித்தமிழ்நாடு' வேண்டும் என்று முழங்கினார். தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பிய அவர் 1942இல் தமிழ்நாட்டிற்குத் திரும்பினார்.

சிங்கப்பூரில் இருக்கும் போதே தமிழ் நாளிதழ் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு தமிழ்நாட்டிற்கு வந்த போதுதான் நிறைவேறியது.

அக்காலத்தில் படித்த பெருமக்கள் வாழும் சென்னை நகரை மையமிட்டே இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. கல்வி அறிவு குறைந்த ஏனைய தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இதழ்கள் நடத்த எவரும் முன்வரவில்லை. அந்நிலையில் மிகத் துணிச்சலோடு தமது முதல் இதழை மதுரையில் தொடங்கினார். 'மதுரை முரசு' என பெயர் சூட்டப்பட்டு இதழ் வெளிவந்தது. அப்போது பிரித்தானிய அரசு கடும் தணிக்கைக்கு உட்படுத்தி இதழைத் தடை செய்தது.

23.8.1942இல் தொடங்கப்பெற்ற அவரின் இரண்டாவது இதழுக்குத் 'தமிழன்' என்று பெயரிடப்பட்டது. பெரியார் அவர்கள் 'திராவிடநாடு' விடுதலையை எழுப்பி வந்த காலத்தில், இவ்விதழானது தமிழ்நாடு விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு வெளியிடப்பட்டது. 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அட்டைப்படமும், 'தமிழர் என்று சொல்வோம்- பகைவர் தமை நடுங்க வைப்போம்' என்ற அவரின் பாடல் வரிகளும் தமிழர்களின் தமிழுணர்வைத் தட்டியெழுப்பியது.

ஆதித்தனாரின் புகழ்பெற்ற 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' தமிழ் வாழ்த்து முழக்கம் அவ்விதழில்தான் முதன்முறையாக வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு விடுதலையோடு தமிழீழமும் விடுதலை பெற வேண்டும் என்று (10-வது இதழில் ) முதன் முதலாகக் குரல் கொடுத்ததும் 'தமிழன்' இதழ்தான்.

ஆயிரம் பிரதிகளோடு தொடங்கிய
'தமிழன்' இதழ் பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்று ஏழாயிரம் பிரதிகள் வரைக்கும் விற்பனையான போதிலும், தாள் பஞ்சம் காரணமாக நிறுத்தப்பட்டது.

ஆதித்தனார் தமது மூன்றாவது இதழுக்கு 'தந்தி' என்று பெயர் சூட்டினார். 1.11.1942இல் 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 'தந்தி' இதழைத் தொடங்கி வைத்தார். ஆதித்தனார் தந்தி இதழுக்கு தாள் கிடைக்காத காரணத்தால் வைக்கோலை ஊற வைத்து தாமாகவே தாள் செய்தார். அதற்கு 'தமிழன் கைக் காகிதம்' என்று பெயரிட்டு தந்தியை அச்சிட்டு வெளியிட்டார். மூலை முடுக்கு கிராமங்களில் எல்லாம் தந்தி படிக்கும் மக்கள் பெருமளவில் உருவானார்கள்.

இதற்குக் காரணம் 'தந்தி' இதழில் பாமரரும் எழுத்துக் கூட்டி படிக்கும் வகையில் நீளமான தொடர்கள் இல்லாமல் சிறிய தொடர்கள் அமைத்து வெளியிடப்பட்டது. செந்தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டது. பிறமொழிச் சொற்கள் தவிர்க்கப்பட்டு நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

தனித்தமிழ் இயக்கத்தவர் படித்தவரிடம் பரப்பிய பல நல்ல தமிழ்ச் சொற்களையெல்லாம் கிராமங்களில் வாழும் பாமரரும் ஒலிக்க வைத்த பெருமை 'தந்தி' இதழையேச் சாரும். 

இந்திய விடுதலைக்குப் பின்பு 1948இல் இவ்விதழ் 'தினத்தந்தி' இதழாக உருமாற்றம் பெற்று இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.

தமிழ்நாடு விடுதலையைக் காண இதழின் ஊடாகப் பேசி வந்த ஆதித்தனார் அவர்கள் ஒரு அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து அதன் ஊடாகவும் தமிழ்நாட்டு விடுதலையைப் பேச விரும்பினார். 1942இல் தமிழ் இராச்சியக் கட்சியை உருவாக்கினார்.

1943இல் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் 'தமிழ்நாடு இளந்தமிழர் இயக்க மாநாடு' ஒன்றையும் சிறப்பாக நடத்தினார். மேலும், தமிழ் இராச்சியக் கட்சியின் கொள்கையை விளக்கும் 'தமிழ் இராச்சியம்' பெயரில் அரிய நூலினை வெளியிட்டார்.

இரண்டாம் உலகப்போரும், இந்திய விடுதலைப் போரும் தீவிரம் பெற்று வந்த நிலையில், தாம் உருவாக்கிய தமிழ் இராச்சியக் கட்சியின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தார்.

அதன் பின்னர், ஆதித்தனார் தொழிலாளர் நலப் போராட்டங்களில் கவனம் செலுத்தினார். 1952இல் கள்இறக்கும் தொழிலாளர்கள் பனைமர வரியால் பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்தார். 

1955இல் செங்கல்பட்டு மாவட்டம் மாத்தூரில் உழவர்களின் கூலி உயர்வுப் போராட்டத்திற்கும் தலைமை தாங்கிப் போராடினார்.

1956இல் ஆதித்தனார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த போது ஐரிஷ் ( அயர்லாந்து) நாட்டு விடுதலை வீரன் டிவேலரா பெயரும், அவர் நடத்திய இயக்கமான 'சின்பெயின்' பெயரும் இவரை வெகுவாகக் கவர்ந்தது.
1958இல் புதிய இயக்கம் கண்டபோது ஐரிஷ் விடுதலையை (வீ ஆர் ஐரிஷ்) நினைவுப்படுத்தும் வகையில் 'நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார்.

நாம் தமிழர் இயக்கத்தின் கொடியானது நீல வண்ணத்தின் பின்னணியில், அதன் நடுவில் வில், புலி, மீனும் பொறிக்கப்பட்டு 'தமிழ் வெல்க' என்ற வரிகளோடு உருவாக்கப்பட்டது.

ஆதித்தனார் முதன்முதலாக வெளியிட்ட நூலான 'தமிழ் இராச்சிய' நூலினை சற்று விரிவாக எழுதி 'தமிழப்பேரரசு' எனும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.

ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்குத் 'தமிழன்' என்று பெயர் வைத்ததைப் போல, இயக்க அலுவலகத்திற்குத் 'தமிழன் இல்லம்' என்றும், இயக்கக் கிழமை இதழுக்குத் 'தமிழ்க்கொடி' என்றும், பதிப்பகத்திற்குத் 'தமிழ்த்தாய்' என்றும், பெயர் சூட்டினார்.

ஆதித்தனார் ஹிந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்ததைப் போலவே ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்தார். 'உலகத்தில் நான் செல்லாத நாடுகள் இல்லை. ஆனால் இரண்டு மொழிகளில் எழுதுகிறவனை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை' என்றார்.

1956இல் மொழிவழி தமிழ் மாநிலம் உருவான பிறகும் அண்ணா 'திராவிட நாடு' கோரிக்கையை எழுப்பி வந்தார். அத்தோடு, சி.பா.ஆதித்தனார் கேட்கும் 'தனித் தமிழ்நாடு' என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.' என்றார்.

அண்ணாவின் இந்த கடும் பேச்சைக் கண்டித்து ஆதித்தனார் பின்வருமாறு பதிலுரைத்தார்:

'மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே!

அது மட்டுமன்று. 'திராவிட நாடு' என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே, 'அத் திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன்' என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் 'திராவிட நாடு' பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, 'திராவிட நாடு திராவிடருக்கே!' என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை'

அதுபோல், தமிழன் தன்னை 'திராவிடன்' என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்து வந்த திரி- வடுகர்களே திராவிடர்கள் ஆவார்கள், தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.

6.7.1958இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மன்னார் குடியில் 'சுதந்திரத் தமிழ்நாடு' மாநாடு நடத்தினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்ட நிலையில் மாநாட்டில் பங்கேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பேசிய பெரியார், 'தமிழ்நாட்டு விடுதலைக் கிளர்ச்சியில் ஆதித்தனாருக்கு இருக்கிற ஆர்வமும், ஊக்கமும் நம்மையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படி செய்து விட்டது' என்றார்.

அந்த மாநாட்டில், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியாரும் பங்கேற்க ஒப்புக் கொண்டார். 5.6.1960இல் நடைபெற்ற பட எரிப்புப் போராட்டத்தில் ஆதித்தனாரும், பெரியாரும் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர்.

அதே ஆண்டில் ஆதித்தனார் ஹிந்தியைத் திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்தார். அந்தப் போராட்டத்தில் முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.

1965இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதால் 9.10.1965இல் ஒன்றியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கோயமுத்தூர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1965இல் பிரிவினைத் தடைச்சட்டம் அச்சுறுத்தி வந்ததால், சிறையை விட்டு வெளியே வந்ததும் நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார். இது அவரின் தமிழ்த் தேசிய கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

ஆதித்தனார் எப்போதும் தேர்தல் களத்தைப் புறக்கணித்தவர் அல்ல. 1947இல் சட்ட மேலவை உறுப்பினர், 1952,1957, 1967ஆம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினர், அண்ணா ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் சட்டப்பேரவைத் தலைவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று பல பதவிகள் வகித்தவர். ஆதித்தனாரின் தேர்தல் அணுகுமுறையும், இலட்சிய உறுதியின்மையும் அவர் முன்னெடுத்த தமிழ்த்தேசிய அரசியலை பலி கொண்டது என்பதை உறுதிபடக் கூறலாம்.

ஆதித்தனார் 21.5.1981 அன்று தமது 76வது அகவையில் காலமானார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.