தமிழை வளர்க்க தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும்? ஆக்கப்பாடு மிக்க பதிலை எதிர்பார்க்கிறேன். இப்படியான கேள்வியோடு பொதுவெளியில் நிறைய தமிழ்ஆர்வலர்கள் உலா வருகின்றனர். அவர்களுக்கான பதிலாக இந்தக் கட்டுரை. 20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழை வளர்ப்பதற்கான அருமையான வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கான மூலமுதலான தமிழ்வழிக் கல்வி என்பதை அந்த வகையான பள்ளிகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக்கான மூலமுதலான தமிழ்வழிக் கல்வி என்பதை நாமே பள்ளியை நிறுவி முன்னெடுக்கலாமே என்றால் நன்றுதான். ஆனால் நாம்மால் ஒரேயொரு பள்ளியை முன்னெடுப்பதே மிகப்பெரும்பாடு ஆகும். சென்னை அம்பத்தூரில் தியாகு என்பவரால் தாய்த்தமிழ்ப் பள்ளி என்றொரு சிறப்பான தமிழ்வழிக்கல்விக்கான பள்ளி தொடங்கப்பட்டது. அதையொட்டி இரண்டாவதாக மேட்டூர் அணை புதுச்சாம்பள்ளியில் தமிழியக்கம் என்கிற எனது நண்பர்களோடு இணைந்த ஒரு அமைப்பின் மூலம், இரண்டாவது தாய்த்தமிழ்ப் பள்ளியை நான் நிறுவினேன். அடுத்து இன்னொன்று என்று, நான் மூட்டிவிட்ட இந்த ஆர்வம் தமிழகம் முழுவதும் தீயாய் பரவ- அடுத்து கோபியில், தொடர்ந்து திருப்பூரில் மற்றும் சின்னதானங்குப்பம், காரைக்கால், மேல்மலையனூர், மேட்டூர் அணை காவேரி நகர், பல்லடம், உடுமலைப்போட்டை, சத்தியமங்கலம் என்று நிறைய பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனந்த விகடன் இதழ் இந்த முயற்சியைப் பாராட்டி மலரில் கட்டுரை வெளியிட்டது. அதையொட்டி உலக அளவில் நன்கொடை வாய்ப்பு என்றெல்லாம் தாய்த்தமிழ் பள்ளிகள் வளர்த்தெடுக்கப்பட்டன.ஆனாலும் நன்கொடையை மட்டுமே நம்பியதால் சில பள்ளிகள் மட்டுமே சிறப்பாக இன்றும் நடந்து வருகின்றன. ஆனால் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழை வளர்ப்பதற்காக கொட்டிக் கிடக்கும் தமிழ்வழிக்கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் ஒருவழிப்பாதையாக உறுதியாக வெற்றியை நோக்கி மட்டுமேசெல்ல முடியும். எனவே நாமே ஒரு பள்ளியை நிறுவினால் எவ்வளவு ஈடுபாடாக உழைப்போமோ அந்த அளவிற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலான மாணவர் சேர்க்கைக்கும் அந்தப் பள்ளிகள் மீது மக்களுக்கு விருப்பம் வரும் வகையாக அந்த பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் நாம் என்பதான ஒரு நட்புறவு அமைப்பை ஏற்படுத்தி அந்தப் பள்ளியின் நிருவாகத்தை அழகு படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம்.