என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட, இந்தியாவில் உள்ள எந்த விடையங்கள் உங்களைச் சினமடையச் செய்கின்றன! என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை 25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு சிறப்புத் தகுதி கேட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு பிரிவுதான் 370. அதை ஒன்றிய அரசில் இருக்கும் பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு நீக்கியுள்ளது. ஆனால் சட்டப்பிரிவு 17 இந்திய மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக ஹிந்தி வெறித்தலைவர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட பிரிவாகும். அந்த விதியின் படி இந்திய அரசிலமைப்பின் நிருவாக மொழியாக உள்ள ஆங்கிலத்தை ஹிந்தி பேசாத மாநில மக்களின் ஒப்புதலோடு 15 ஆண்டுகளுக்குள் நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஹிந்தியை முழுமையாக நிறுவியிருக்க வேண்டும். ஆனால் நிறுவ முடியவில்லை. ஆங்கிலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவின் அலுவல் மொழித் தொடர்பாக- இந்தியா பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்ட தேசிய இனங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில்- அட்டவணை எட்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்படி ஆங்கிலத்தை அப்புறப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிந்தி, மேலும் வடஇந்திய ஹிந்தி வெறியர்களின் கனவு மொழியான சமஸ்கிருதம், மற்றும் நம்தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திமுகவின் முழுமுயற்சியால் நமது தமிழ்நாடு, எங்களுக்கு பிரிவு 17ல் ஆங்கிலம் மட்டும் போதும். ஹிந்தி வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்து விட்டது. மற்ற மாநிலங்களும் ஆங்கிலத்தை அகற்ற ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அந்த 15 ஆண்டு கால எல்லையான 1965 உடன் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை முன்னெடுக்கிற நோக்கம் தோல்வியுறுகிறது. இதனால் 1965க்குப் பிறகு ஹிந்திக்கான சிறப்புத் தகுதிக்கு ஹிந்தி பிரச்சார சபா போன்ற எந்த அமைப்பிற்கும், அட்டவணை எட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஹிந்திக்குமட்டும் தனிப்பட்ட வகையில் ஒன்றிய அரசு எந்தச் செலவும் செய்யக்கூடாது. அப்படிச் செய்வது சட்டப்படியான குற்றமே. 1965க்குப் பிறகு ஆங்கிலம் தொடர்ந்திருக்கும் நிலையில் ஹிந்திக்கான தனிப்பட்ட சிறப்புத்தகுதி தானாகவே காலாவதி ஆகிவிட்டது. ஆனாலும் காங்கிரசும், பாஜகவும் தொடர்ந்து ஹிந்தியின் சிறப்புத்தகுதியை பேணிவருவதும், அட்டவணை எட்டை நடைமுறைப்படுத்தும் வகைக்கு கூகுள் தேடல் மற்றும் கூகுள் மொழிபெயர்ப்பில் உலகின் 108 மொழிகள் முன்னெடுக்கப்படுவதை போன்றதான- இந்திய அலுவல்களில் 22 மொழிகளையும் முன்னெடுக்கும் வகைக்குக் கிஞ்சித்தும் முயலாததும் என்னுள் கனன்று ஆறமறுக்கும் சினமாகும். இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியலானது இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளின் பட்டியலாகும். இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள 344(1) மற்றும் 351 ஆவது கட்டுரைகள் கீழ்காணும் 22 இந்திய மொழிகளை உள்ளடக்கியுள்ளன
தமிழ்
அசாமியம்
பெங்காலி
போடோ
தோக்ரி
குசராத்தி
ஹிந்தி
கன்னடம்
காசுமீரி
கொங்கனி
மைதிலி
மலையாளம்
மணிப்புரி
மராத்தி
நேபாளி
ஒடியா
பஞ்சாபி
சமற்கிருதம்
சந்தாளி
சிந்தி
தெலுங்கு
உருது.