Show all

அம்மாவை அழைக்கின்றன. அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே! உலகின் அத்தனை மொழிகளும்

அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்அ ம்அ ம்அ என்று மீண்டும் மீண்டும் குழந்தையின் வாயிலிருந்து ஒலி வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.

ஆக, 'அ' என்றால் திறத்தல். 'ம்' என்றால் மூடுதல். இன்னொரு 'ம்' அகத்தில் இருத்தி காத்தல் என்பதைக் குறிக்கிறது. குழந்தை அம்மா என்கிற போது இரண்டு 'ம்' கள் மட்டுமல்ல, பல 'ம்' கள் ஒலிக்கப்படுவதில் அந்த குழந்தை மாதக்கணக்கில் சேயிழையின் அகத்தில் இருத்தி காக்கப்பட்டது என்பது புலனாகிறது. இறுதி எழுத்து ஆவில் விரிவாகத் திறந்து ஈன்று புறந்தருகிறாள் சேயைச் சேயிழை என்பதை புரிந்;து கொள்ள முடிகிறது. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்கிற புறநானூற்றுப் பாடலில் பெண்பாற் புலவர் பாடியது பொருத்திப் பார்க்கத்தக்கது.

இதில் பங்கு பெறுகிற அப்பாவிற்கு அம்மாவில் இருக்கிற 'ம்' க்கு பகரமாக 'ப்' வருகிறது இந்த 'ப்' புறத்தைக் குறிக்கிறது. அப்பால், அப்புறம், அப்பொழுது, போன்ற சொற்களைப் பொருத்திப் பார்க்கலாம். அம்மா ஈன்று புறந்தருகிற அந்த சேய், அப்பாவின் அணுவாகவும் இருந்ததுதான். ஆனால் இங்கே அப்பாவில் இருந்து வெளியேறி சேயிழையின் (சேயைத் தாங்கும் தாய்) அகத்தில் இருத்திக் காக்கப்படுகிறது. 

அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். 

ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா ஆய்ச்சி அம்மாச்சியும். 

அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே உலகின் அத்தனை மொழிகளும், அவரவர் அம்மாவை அழைத்துக்  கொண்டிருக்கின்றன. இத்தகு தன்மை தமிழின் தொன்மைக்கும், தமிழின் உலக மொழிகளின் முதன்மைக்கும் காரணமாகி, உலகமொழிகளுக்கெல்லாம் அம்மா என்ற சொல்லை வழங்கி, உலகமொழிகளின் தாயாக விளங்குகிறது தமிழ் மொழி.

தமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துக்கள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துக்கள் ஆகின்றன என்று தமிழ் இலக்கணம் வரையறுக்கிறது.

அம்மாவில் உள்ளீடாக இருக்கிற இந்த மெல்லின மகரமெய் எழுத்துக்கு இனஎழுத்தாக இருக்கிற வல்லின எழுத்து பகரமெய் அல்லவா? அதானலேயே நம்மை ஈன்றெடுத்த பெற்றோரில் மற்றொருவரான அப்பாவில் இந்த பகரமெய்யை உள்ளீடாக்கியிருக்கிறது தமிழ். 

அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே உலகின் அத்தனை மொழிகளும் கொண்டிருக்கின்றன. இதைப் போலவே அப்பா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே உலகின் அத்தனை மொழிகளும் கொண்டிருக்கின்றன. 

ஆக அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.

தமிழில் அம்மாவாக அப்பாவாக இருப்பதே, ஆங்கிலத்தில் மதர் பாதர், ஹிந்தியில் மான் பிதா, வடமொழியில் மாதா பிதா, அராபிக் மொழியில் அம் அப், செருமானிய மொழியில் மம்மா பாப்பா, கிரேக்க மொழியில் மம்மா பம்மாஸ், சீன மொழியில் மம்மா பாபா, உருஷ்ய மொழியில் மம்மா பாப்பா, பிரஞ்சு மொழியில் மம்மன் பாப்பா என்றே அழைக்கப்படுகிறது. வேறுவகையாக- மகரமெய் பகரமெய் இல்லாமல் அம்மா அப்பாவை அழைக்கிற மொழி உலகில் ஒன்று கூட இல்லை என்பதே உண்மை. உலகினர் அவரவர் தாய்மொழியில் பேசிக் கொண்டிருக்க, தமிழனோ உலக மொழிகளின் தாய்மொழியில் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை தமிழர் அறிந்துகொள்ள வேண்டும். கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,669.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.