சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக முதலாவதாக அடும்பு மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை. அடும்பு அல்லது அடம்பு என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்தில் விளைவதாகக் குறித்துள்ளனர். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) ‘குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக்கூடியது அடம்பு. பல்வேறு நன்மைகளைக் கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்புவின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும் புக்கள் நீல நிறத்திலும் காணப்படும். அடும்பு மருத்துவ மூலிகையானது வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.