சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல கணியக்கலை. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே கணியக்கலை. இந்தக் கலையின் அடிப்படையில் இன்று தொடங்கும் ஆங்கில ஆண்டு 2022ன் இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றிக்கு முயலும் வகைக்கானது இந்தக் கட்டுரை. 17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தனிமனித முன்னேற்றத்திற்குத் தமிழர் உருவாக்கிய மூன்று கலைகள் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை 2.கணியக்கலை 3.மந்திரக்கலை தனிமனித முன்னேற்றத்திற்கான இந்த மூன்று கலைகளில் முதலாவது மட்டுமே, தப்பும் தவறுமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கலைகள், நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும். அந்த முன்னேற்றக்கலைகள் மூன்றில் 1.சாதகம் சோதிடம் என்கிற பலன் அறிகிற நிமித்தகக்கலை. 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலை. 3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலை ஆகும். எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வெள்வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக வெள்ளி அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 47 ஆகும். அலுமனிய அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 13 ஆகும். அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. பெயர் போலவே, நாம் அமைத்துக் கொண்ட நாளுக்கும் இயல்பு உண்டு. கிழமைக்கும் இயல்பு உண்டு. தொடர்நாளுக்கும் இயல்பு உண்டு. ஆண்டுக்கும் இயல்பு உண்டு. இந்தக் கட்டுரையில் உலகினர் நிருவாகத்திற்குப் பயன்படுத்தி வருகிற ஆங்கில ஆண்டின் இயல்பைப் புரிந்து கொண்டு சாதிக்க தமிழர் தம் கணியக்கலை அடிப்படையிலான சில தகவல்களை பகிர்ந்து கொள்ளப் போகிறோம். தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்றுடன் தான்தோன்றி இயக்கம் இல்லாத விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில், தான்தோன்றி இயக்கம் இல்லாது நம்மால் இயக்கம் பெற்று நம்மை இயக்குகிற விசும்பை- பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் இந்த வகைக்கு பதிவாகிறது. இந்த வகைக்கு என்றால்: நம்மை விசும்பு இயக்குவதற்கு, நாம் கொடுத்த இயக்கமாக, நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? அதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். என்பதை தமிழ் முன்னோர் சங்கம் வைத்து கூட்டுச் சிந்தனையால் ஆய்ந்து கண்டிருக்கின்றனர். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:- இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த இயல்புகளை உறவாக்கிக் கொண்டு முன்னேறவே தமிழர் அமைத்தனர் கணியக்கலை. எண் ஆறின் இயல்பு தொழில் நுட்பம் என்ற வகையில் இன்று பிறந்திருக்கிற ஆங்கில ஆண்டு 2022ன் இயல்பு தொழில் நுட்பமாகும். தொழில் நுட்பம் என்கிற இந்த இயல்பு 2022 ஆங்கில ஆண்டின் ஆட்சி இயல்பாகத் தொடரப் போகிறது. இந்த ஆண்டில் தொழில் நுட்பம் சார்ந்த விடையங்களை முன்னெடுப்பது எளிதில் சாத்தியமாகும். இந்த ஆண்டில் தொழில் நுட்பத் துறையினர் முன்னிலை பெற்று உலகை இயக்க முயன்றால் அது எளிதில் சாத்தியமாகும். தொழில் நுட்பத்தை முன்னிலை படுத்துகிற மனிதர்களும் நாடும் வல்லமைபெறுவது எளிதில் சாத்தியமாகும். ஆறின் இயல்புக்கு உரிய கிழமை வியாழக்கிழமை ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டின் ஐம்பத்து இரண்டு வியாழக்கிழமைகளும் இந்த ஆண்டின் இயல்பான தொழில் நுட்பத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும். ஒன்பது எண்களில் ஆறு எண் வியாபித்து இருத்தல் என்கிற இயல்புக்கு உரியது கோள்களில் வியாழனே மிகப்பெரியது. பேரளவாக இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருப்பவர்களின் போராட்டத்திற்கு இந்த ஆண்டு நல்ல வகையில் மதிப்பளிக்கப்படும் வகை சாத்தியமாகும். போக்குவரத்துத் துறையில் புதிய தொழில் நுட்பமாக உலகின் பெரும்பாலான நாடுகள் கருதிவரும் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் பைக்குகள் எளிதாக மக்கள் வரவேற்பைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். தொழில்நுட்பம் மிகுந்தவை உலகளாவி வளர்ந்து வரும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோகரண்சி) என்கிற வகையில்- குறளிச்செலாவணியை நிறைய நாடுகள் அங்கீகரிப்பது எளிதாக சாத்தியமாகும். இதற்கு குறளிச்செலாவணிதளத்தில் இயங்குகிறவர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். இந்த ஆண்டில் எப்படி சாதிப்பது என்பதற்கு எண் ஆறின் இயல்புகளை எல்லா வகையிலும் பொருத்திக் கொண்டு முயல்கிறவர்கள் எளிதாக வெற்றி பெற முடியும். இந்த ஆண்டில் ஆறின் இயல்பு குறித்து ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை எழுதுகிற அளவிற்கு உங்கள் கல்வியையும் அனுபவத்தையும் கொண்டு தகவல் திரட்டி சாதித்திட எனது வாழ்த்துக்கள்.
இதைத்தான் திருக்குறள்-
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல்
உலகினர் நிருவாகத்திற்குப் பயன்படுத்தி வருகிற ஆங்கில ஆண்டு 2022ஐ எழுதியும் ஒலித்தும் ஆண்டின் 365 நாளும் 15 நாழிகையும், 31 விநாழிகையும், 15 தற்பரையும் விசும்பில் இந்த ஆண்டின் ஆட்சி இயல்பு தொழில் நுட்பம் என்று பதிவு செய்து இந்த ஆண்டில் தொழில் நுட்ப இயல்பை வலுப்படுத்த உள்ளனர்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை
என்ற குறளில்- உழவே தலை என்று திருக்குறள் நிறுவது போல, இந்த ஆண்டு தொழில் நுட்பமே தலை என்று நிறுவ முயலும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,115.